மருத்துவ குணம் கொண்ட பனங்கிழங்கு

மருத்துவ குணங்கள் கொண்ட பனங்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ராமநாதபுரத்தில் ஒரு கட்டு ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-02-05 18:49 GMT

மருத்துவ குணங்கள் கொண்ட பனங்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ராமநாதபுரத்தில் ஒரு கட்டு ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பனங்கிழங்கு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகம் உள்ள நிலையில் அதில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பனைமரங்களில் இருந்து கிடைக்கும் பதனீர், பனங்கிழங்கு, நுங்கு, பனம்பழம் போன்ற அனைத்துக்கும் என்றும் மவுசு கூடிக்கொண்டே வருகிறது. மக்கள் இயற்கையான பொருட்களின் மீது நாட்டம் கொண்டு அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

பனம்பழ கொட்டையின் மூலம், விவசாயிகள் பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடுவது வழக்கம். பனங்கொட்டைகளை 3 அடி ஆழமுள்ள குழியில் புதைக்கின்றனர். 3 மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தியாகிறது. இதனை வேக வைத்தும், பச்சையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

நார்ச்சத்து அதிகம்

பனங்கிழங்கை பொறுத்தவரை பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

விலை வீழ்ச்சி

இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் அதிகளவில் பனங்கிழங்குகள் விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் பனங்கிழங்குகளை வாங்கி சென்றனர். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை முடிந்தபின்னர் பனங்கிழங்குகளின் விலை சரியத்தொடங்கி உள்ளது. பொங்கல் சமயத்தில் 20 கிழங்குகள் விலை ரூ.100 என்று விற்பனையான நிலையில் தற்போது 25 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.70 என விற்பனையாகிறது. ஒரு கட்டு கிழங்குக்கு ரூ.30 குறைந்தது. இதுதொடர்பாக பனங்கிழங்கு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஈஸ்வரி என்ற பெண் கூறியதாவது:-

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் குறைந்து விட்டது. இதுதவிர, பனங்கிழங்கு அறுவடைக்கும் போதிய ஆட்கள் கிடைக்காமலும், கூலி அதிகம் கேட்பதாலும் கடந்த ஆண்டை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பொங்கல் சமயத்தில் தேவை கருதி பனங்கிழங்கினை மக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டதால் பனங்கிழங்கினை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதன்காரணமாக விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் ஒருசில வாரங்கள் மட்டுமே இந்த பனங்கிழங்கு விற்பனை செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்