மருத்துவ மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு விவரங்களை வெளியிட வேண்டும்-மதுரை எம்.பி. வலியுறுத்தல்

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-20 19:32 GMT

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு விவரங்களை வெளியிட வேண்டும் என்று மதுரை எம்.பி. வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

எம்.பி.பி.எஸ். அகில இந்திய சேர்க்கை

நீட் தேர்வு முடிவுக்கு பின்னர் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில், நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கிடையே அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் விதிமீறல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால், சுமார் 2 ஆயிரம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தி.மு.க. உள்ளிட்ட அந்தந்த மாநில கட்சியினர் மற்றும் ஆந்திரபிரதேச மருத்துவ மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து, மதுரை எம்.பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இனவாரியாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. பொதுப்போட்டியில் கலந்து கொள்ளும் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கைக்கு பின்னரே, இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடப்பது வழக்கம். இதனை சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் அதன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீடு விதிமீறல்

ஆனால், இந்த இடங்களுக்கான இடஒதுக்கீட்டு அனுமதியில் விதிமீறப்பட்டுள்ளது. இந்த விதிமீறலால் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கல்வியாண்டிலும் இந்த நிலை தொடரக்கூடாது. எனவே, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மண்டேலியா விளக்கமளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டின்படி, மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த இளநிலை மருத்துவ காலியிடங்கள் எவ்வளவு?

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் நிரப்ப வேண்டிய இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? பொதுப்போட்டியில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது தேர்வான ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை என்ன? பொதுப்பிரிவினர் தவிர, ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்றவர்கள் எத்தனை பேர்? பொதுப்போட்டியில் தகுதி பெற்ற இடஒதுக்கீட்டு பிரிவினர்களில் எத்தனை பேர், இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். விதிமீறல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் சேர்க்கை அனுமதிக்க வேண்டும். இடஒதுக்கீட்டு முறையை சிதைக்கும் முயற்சிகளை தமிழகம் ஒரு போதும் அனுமதிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்