மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: 30 பேருக்கு ரூ.15¾ லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள்-கலெக்டர் வழங்கினார்

சிவகங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 பேருக்கு ரூ.15 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-08-24 18:45 GMT

சிவகங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 பேருக்கு ரூ.15 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

மருத்துவ முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 20-ந் தேதி தேவகோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இதே போன்று முகாமும் நடைபெறவுள்ளது.

அடையாள அட்டை

இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டிஐ.டி.) ஆகிய அட்டைகளை பெறுவதற்கு ஏதுவாகவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அனைத்து சிறப்பு மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டையினையும், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றம் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்தி 78 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11 ஆயிரத்தி 500 வீதம் ரூ.1 லட்சத்தி 95 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மேலும் முகாமில் கலந்து கொண்டு தற்சமயம் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டிஐ.டி.) ஆகியவைகளை கலெக்டர் வழங்கினார்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்