ஆண்டிப்பட்டி, பெரியகுளத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஆண்டிப்பட்டி, பெரியகுளத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2023-06-24 21:00 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. மேலும் பொது மருத்துவம், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவர், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதுதவிர சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாமின்போது கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப்பெட்டகமும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் உள்ளடக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. இதில், தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்புச்செழியன், ஆண்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சரவணக்குமார் எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கண்ணையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்