கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ உதவி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ உதவி மையத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-28 12:16 GMT

திடீர் மயக்கம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இங்கு பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர மக்கள் குறைதீர்வு கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கும் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சிலர் திடீரென மயக்கம் அடைந்து விழுகின்றனர்.

முதியவர்களும் பலர் வருகிறார்கள். அவர்களுக்கும் மயக்கம், வாந்தி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உள்ளது.

மருத்துவ உதவி மையம்

எனவே கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு மையத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவி அவசியமாகிறது. எனவே இந்த மருத்துவ உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 2 செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். உடல்நிலை பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்