சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.

Update: 2023-10-05 17:23 GMT

கஞ்சா, சாராயம் விற்பனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டம் தோறும் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகள், தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளிடம் முதல்-அமைச்சர் தனித்தனியாக கேட்டறிந்தார். பின்னர் அவர் மாவட்டத்தின் வளர்ச்சி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்து கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நான் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதைப்பொருட்கள், சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக தற்போது வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, சாராய விற்பனை கட்டுக்குள் உள்ளது. மலைப்பகுதிகளில் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்படுகிறது. அதேபோன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வருவதை தடுக்கவும், அவர்கள் மீது தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

64 இடங்கள்

சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பவர்கள், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் சாராய வியாபாரிகள் ஆவர். சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகளவு நடைபெறுகிறது. அதில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கவும் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளாக 64 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு விபத்து நடைபெறாமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு ரோந்து படை ஆரம்பித்து சாலை விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு ரோந்து படை பள்ளி மாணவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்தாண்டை விட இந்தாண்டு இதுவரை 10 சதவீதம் குறைவாகும். ஆனால் அதேநேரத்தில் சாலை விபத்துகள் கடந்தாண்டை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்