கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை-கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
பருவமழை
சேலம் மாவட்டத்தில் போதிய அளவு பருவமழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் உள்கட்டமைப்பு ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை அமைத்து கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப அலுவலர்கள் குடிநீர் வழங்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து சரியான திட்டமிடல் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். குறிப்பாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
முன்னேற்பாடு
மேலும், கோடை காலங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் 2021-22-ஆம் நிதி ஆண்டில் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல், சீரமைக்கும் பணிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், சாலை மேம்பாடு மற்றும் குமரகிரி ஏரி, பள்ளப்பட்டி ஏரி, போஸ் மைதானம் மற்றும் பழைய பஸ் நிலையம் சீரமைப்புகள் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட 91 பணிகள் ரூ.973 கோடியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவில் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
குறிப்பாக அரசின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்துவரும் சூழ்நிலையில் சீரான குடிநீர் வினியோகம், தெருவோரங்களில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், கழிவுநீர் கால்வாய்களை நீர் தேங்காமல் உடனுக்குடன் சரி செய்வது உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ்ராம், மாநகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.