விழுப்புரம் நகர மக்களுக்கு குடிநீர், உணவு தடையின்றி கிடைக்க நடவடிக்கை

விழுப்புரம் நகர மக்களுக்கு குடிநீர், உணவு தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2022-12-09 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் நகராட்சியில் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும், மீட்பு உபகரணங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதையும் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் நகரில் புயலின்போது மின்தடை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் குளோரின் பவுடர் கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர டேங்கர் லாரிகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு தேவைப்படும் இடங்களில் பொதுமக்களுக்கு வினியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் புயல், மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 8 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அதை வெளியேற்ற நகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார், பொக்லைன் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள். புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றவும் ஜெனரேட்டர் வசதியுடன் மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பாதிக்காத வகையில் விழுப்புரம் நகராட்சியில் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் எவ்வித அச்சமடைய வேண்டாம் என்றார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகரமைப்பு அலுவலர் கோகுலகண்ணன், நகரமன்ற கவுன்சிலர்கள் இளந்திரையன், புல்லட்மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்