கரிதுகள்கள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை
மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் இருந்து கரிதுகள்கள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் தெரிவித்தார்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆலை வளாகத்தில் உள்ள எந்திரங்கள் மற்றும் சர்க்கரை உற்பத்தி குறித்து ஆய்வுமேற்கொண்ட அவர் ஆலையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறும்போது, பழமையான இந்த சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் தற்போது சர்க்கரை உற்பத்தி மிகவும் அதிகளவில் இருப்பது மட்டுமின்றி ஆலையும் நன்றாக இயங்கி வருகிறது. எனவே ஆலையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களை பாராட்டுகிறேன். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரிதுகள்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வரும் காலங்களில் கரிதுகள்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சர்க்கரை ஆலை வளாகத்தில் இணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.