குரோமியக்கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக்கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2022-06-16 17:37 GMT


27 ஆண்டுகளாக மலைபோல் தேங்கியிருக்கும் குரோமியக்கழிவுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

குரோமிய கழிவுகள்

ராணிப்பேட்டையில் இருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் 1975-ம் ஆண்டு அரசு நிறுவனமாக தொடங்கப்பட்டது ‌. இத்தொழிற்சாலை தனியாருக்கு விற்கப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு மூடப்பட்டது. இத்தொழிற் சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 2.27 லட்சம் கிலோ குரோமிய கழிவுகள் இந்த இடத்தில் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த குரோமியக்கழிவுகள் அகற்றப்படாததால் இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கால்வாய், குளம், ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது இத்தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமியம் கழிவுகள் மழை நீர் மூலமாக கலந்து நீர் நிலைகளை சென்றடைகிறது. இதனால் இங்குள்ள நீர் நிலைகள் மாசடைகின்றது. இந்த நீரை பொதுமக்கள் அருந்துவதால் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் வருகின்றது. எனவே இதை விரைவில் அகற்ற வேண்டும் என்று தினத்தந்தியில் கடந்த மே மாதம் 19-ந்தேதி விரிவாக படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் குரோமிய கழிவுகள் தேங்கியுள்ள டி.சி.சி குரோமிய தொழிற்சாலையை தமிழக சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

அகற்ற நடவடிக்கை

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்ற சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கழிவுகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். குரோமிய கழிவுகளை அகற்றுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டி, முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளாஸ்டிக் அகற்றும் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரை துறை அமைச்சர் என்ற முறையில் பாராட்டுகிறேன்.

குறுங்காடுகள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் குறிப்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் வாயிலாக தமிழகத்தில் 20 சதவீத பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. பிளாஸ்டிக் எரிப்பதை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தடுத்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுங்காடுகள் அதிகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு கோடி மரக்கன்றுகள் இன்னும் ஒரு வருடத்தில் நட முதல்-அமைச்சர் திட்டம் தீட்டியுள்ளார். 1000 மரங்கள் கொண்ட குறுங்காடுகளை உருவாக்க சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 10,000 குறுங்காடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை மூலம் வரும் 10 ஆண்டுகளில் 250 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ராணிடெக் சேர்மன் ரமேஷ் பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்