காரில் தொங்கிய படி பயணம்: மேயரின் விருப்பமா? நேயரின் விருப்பமா? தமிழிசை சவுந்தரராஜன்
முதல்-அமைச்சரின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கியபடி பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சென்னை,
'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காசிமேடு துறைமுகத்திற்கு வந்த பொழுது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியாவும், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும், சட்டமன்ற உறுப்பினர் எபினேசரும் முதல்-அமைச்சரின் கான்வாயில் தொங்கியபடி பயணித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை
"இது என்ன மேயர் விருப்பமா, நேயர் விருப்பமா" எனத் தெரிவித்தார். அதே நேரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது குறித்த கேள்விக்கு, "கான்வாயில் ஆணுக்கு நிகராகச் சென்ற பெண்மேயரின் பணியைப் பாராட்ட வேண்டுமே தவிர, விமர்சிக்கக் கூடாது. மேயர் காரில் தொங்கியபடி சென்றது துடிப்பான செயல்" எனத் தெரிவித்துள்ளார்.