சேலம் மாநகராட்சியில் வரி வருவாயை பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சியில் வரி வருவாயை பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-06-23 22:14 GMT

சேலம்:

ஆய்வுக்கூட்டம்

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வருவாய் பிரிவு, கணக்கு பிரிவு, பொது பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சிக்கு ஒரு ஆண்டுக்கு வரவேண்டிய மொத்த வரி, இதுவரை வசூல் செய்யப்பட்ட வரி எவ்வளவு?, நிலுவையில் உள்ள வரி எவ்வளவு?, அதனை வசூல் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூலம் எத்தனை சதவீதம் வரி நிலுவையில் உள்ளது என்பதை வரி வசூலிப்பவர்கள் கண்டறிந்து அதனை முறைப்படுத்திடவும், தொழில்வரி, சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் வரி, குத்தகை வரிகள் மற்றும் பிற இனங்கள் மூலம் பெறப்பட வேண்டிய நிலுவை வரிகளை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தனிக்கவனம்

1.7.2022 முதல் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட உள்ளதால் குடியிருப்பாளரிடம் இருந்து சுயமதிப்பீட்டு பெறப்பட்ட படிவம் விவரம், விண்ணப்பங்கள் வினியோகம் விவரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசுகையில், மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிப்பது வருவாய் பிரிவாகும். வரி வசூலிப்பதில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து முறையாக வரி வசூல் செய்வதில் வரி வசூலிப்பவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். வரி வருவாயை பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நிலுவை வரிகள் அனைத்தையும் வசூல் செய்ய வேண்டும். முறையாக வரி வசூலில் ஈடுபட்டு மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் முழுமையாக நடைபெற தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும், என்றார்.

இதில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, சாந்தி மற்றும் வரி வசூலிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்