ஓடைகளை தூர்வாரும் பணியை மேயர் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் ஓடைகள் தூர்வாரும் பணியை மேயர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி மண்டலம் ஏ.டி.சி நகர் தரைமட்ட பாலம் ஓடை தூர்வாரும் பணி, ராமன்குட்டை குளக்கரைகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நேற்று மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம் மண்டலத்தில் 1 கிலோ மீட்டர் நீளமுள்ள அந்தோனியார்புரம் ஓடையை சுமார் 100 தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியையும், ராசிநகர் ஓடை தூர்வாருதல் மற்றும் அணைமேடு பகுதியில் திருமணி முத்தாறு தூய்மைப்படுத்தும் பணி, மிலிட்டரி ரோடு, கொண்டலாம்பட்டி மண்டலம் ராஜவாய்க்கால் ஓடை தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்தனர். மேலும், அம்பாள்ஏரி பகுதியில் பொதுமக்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் துணைமேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், அசோகன், பொது சுகாதார நிலைக்குழுத்தலைவர் ஏ.எஸ். சரவணன், உதவி ஆணையாளர்கள் கதிரேசன், ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள் சிபி சக்கரவர்த்தி, செல்வராஜ், செந்தில்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.