மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி
ஐப்பசி மாத அமாவாசையைெயாட்டி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
ஐப்பசி மாத அமாவாசையைெயாட்டி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
தீர்த்தவாரி
கங்கையை துலா மாதமான ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதனை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்து வருகிறது. அதேபோல் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நேற்று தீர்த்தவாரி விழா நடந்தது.
காவிரி கரைக்கு எழுந்தருளினார்
இதை முன்னிட்டு ஐயாறப்பர் சாமி, காசிவிஸ்வநாதசாமி, தெப்பக்குள காசி விஸ்வநாதசாமி, வதானேஸ்வரர் கோவில் மேதா தட்சிணாமூர்த்தி சாமி ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினர்.
அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் குருபகவானுக்கு பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
புனித நீராடினர்
தொடர்ந்து காவிரியின் இருகரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமிதீர்த்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் தருமபுரம் ஆதீனம் உள்பட திரளான பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினர்.