திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.36½ கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்துக்கு அருகில் ரூ.18 கோடியே 10 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொலிவுபடுத்தப்பட்ட பஸ் நிலையத்தை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக திறப்பு விழா நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் மின் இணைப்பு மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளால் தாமதமாகி போனது.
இந்தநிலையில் 98 சதவீத பணிகள் நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பஸ் நிலைய பணிகளை நேற்று ஆய்வு செய்தார். மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உடனிருந்தனர். பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள், உணவகம், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளை ஒவ்வொன்றாக மேயர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து விரைவில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வு குறித்து மேயர் தினேஷ்குமார் கூறும்போது, 'பஸ் நிலைய திறப்பு விழா விரைவில் நடைபெறும். இறுதிகட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 98 சதவீதம் நிறைவடைந்து விட்டது' என்றார்.