மகளுடன் திருவிழாவிற்கு சென்ற இளம்பெண் மாயம்
மகளுடன் திருவிழாவிற்கு சென்ற இளம்பெண் மாயமானார்.
சிவகாசி,
சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி துர்கா (வயது 27), மகள் ஹரிபிரியா (4) ஆகியோர் முத்துப்பாண்டியின் தாய் அனுசியாவுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக துர்கா தனது மகள் ஹரிபிரியாவுடன் கடந்த 17-ந்தேதி சென்றுள்ளார். ஆனால் அவர் பெங்களூரு போகவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து துர்காவின் செல்போனுக்கு போன் செய்த போது அது சுவிட்ச்ஆப் என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தனது மருமகள் மற்றும் பேத்தியை கண்டு பிடித்து தரும்படி சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர் வீட்டுக்கு சென்ற ராணுவவீரரின் மனைவி மற்றும் மகள் மாயமான சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.