2 வாலிபர்கள் படுகொலை
விருதுநகர் அருகே 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முன்விரோதத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி
விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்பின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவருடைய மகன் சந்தனகுமார் (23). இவர் கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார். ஊருக்கு வரும்போதெல்லாம் குமார் என்பவருடைய மகன் கே.மணிகண்டனுடன் (18) சுற்றித்திரிவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சந்தனகுமார் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் சந்தனகுமார், தனது நண்பரான கே.மணிகண்டனுடன் அங்குள்ள கண்மாய்க்கு சென்றார்.
படுகொலை
அப்போது அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்ற கும்பல், சந்தனகுமார், கே.மணிகண்டனை வழிமறித்து, அவர்கள் 2 பேரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
இதுபற்றி அறிந்ததும் இருவரது குடும்பத்தினரும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் வச்சக்காரப்பட்டி போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கொலையுண்ட 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சந்தனகுமாரின் தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்விேராதம்
முதற்கட்ட விசாரணையில் முன்விேராதம் காரணமாக 2 பேரும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆடுகள் திருட்டு போனது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பொத்தையன் என்பவரது மகன் பி.மணிகண்டனுக்கும், சந்தனகுமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் சந்தனகுமார், அவரது நண்பரான கே.மணிகண்டனுடன் கிராமத்தில் உள்ள கொடிமரம் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பி.மணிகண்டனுக்கும் சந்தனகுமாருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து ஊருக்கு வந்திருந்த சந்தனகுமார், அவருடைய நண்பருடன் கண்மாயில் இருந்தபோது, ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பி.மணிகண்டன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த இரட்டைக்கொலை அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பி.மணிகண்டன் என்பவர் போலீசில் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மற்ற கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.