மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் மண்டை உடைப்பு
வேடசந்தூர் அருகே, மதுபாட்டிலால் அடித்து கொத்தனார் மண்டையை உடைத்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள சுஞ்சப்பன்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 55). கொத்தனார். நேற்று முன்தினம் இவர், அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கு சிமெண்டு சாலை அமைக்க, அதே ஊரை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடாஜலபதி (57) எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் எதிர்ப்பை மீறி சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரவி, வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடாஜலபதி, ரவியிடம் தனது எதிர்ப்பை மீறி சிமெண்டு சாலை அமைத்தது குறித்து கேட்டு தகராறு செய்தார். மேலும் ஆத்திரம் அடைந்த வெங்கடாஜலபதி, தான் வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து ரவியின் தலையில் அடித்தார். இதில் ரவியின் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து வெங்கடாஜலபதியை கைது செய்தார்.