குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா
குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள அபராதரட்சகர் எனப்படும் குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் விக்னேஷ்வரர் பூஜையும், கலச பூஜையும், யாகமும், கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் அறநிலையத்துறையினர், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வருகிற மார்ச் 3-ந் தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி மாசி மகத்தையொட்டி சுவாமி-அம்பாள் புறப்பாடு நடக்கிறது.