மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றம்திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-18 18:45 GMT


மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும், மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

இதையொட்டி, காலை 8 மணிக்கு கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு ஊரின் முக்கிய பிரமுகர்கள் மேளதாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்பு அவர்களுக்கு மாலை மரியாதை செலுத்தியவுடன் பூசாரிகள் கொடிமரம் இடத்துக்குச் சென்றனர். அங்கு கொடிமரத்துக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தர்ப்பை புல் மற்றும் மஞ்சள் காப்பு வைத்து கட்டியவுடன் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சக்தி கரகம் எடுத்து வருதல்

பின்பு கோவிலுக்கு வந்த பூசாரிகள் யாகம் செய்து கரகம் எடுக்கும் பூசாரிக்கும் மற்றும் மன்னார் காப்பு கட்டும் பூசாரிக்கும் கையில் காப்புகட்டினர். இரவு 10.30 மணிக்கு பம்பை மேளதாளம் முழங்க பூசாரிகள் அக்னி குளத்துக்குச் சென்றனர். அங்கு பலவித பூக்களால் பூங்கரகம் (சக்தி கரகம்) செய்தனர். அதை 9 நாட்கள் விரதமிருந்த காசி பூசாரி தலையில் வைத்து கட்டினர். பின்பு முக்கிய வீதிகள் வழியாக ஆடியபடி ஊர்வலமாக வந்து அதிகாலை கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

மயானக்கொள்ளை

2-ம் நாள் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்