மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

மாந்தை ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-02-17 18:45 GMT

குத்தாலம்:

மாந்தை ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

குத்தாலம் ஒன்றியம் மாந்தை ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிமாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாந்தை ஊராட்சியில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய அணி ஒன்றிய செயலாளர் வைரவன், மாவட்டக்குழு நிர்வாகிகள் பாஸ்கரன், ராமகுரு உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் கோமதி, பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி, குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார், வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் கும்பகோணம்-காரைக்கால் பிரதான சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்