மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள கலெக்டா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நிரந்தர பணியாளர்களை நீக்கி தனியாரிடம் வழங்கும் அரசாணையை கைவிட வேண்டும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், டெங்கு பணியாளர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து மாவட்ட கலெக்டர் கூறியபடி தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க செயலாளர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுடலை மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், மாநில குழு உறுப்பினர்கள் அந்தோணி, சித்ரா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது ஏற்கனவே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
120 பேர் கைது
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 120 பேரை நேசமணி நகர் போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.