மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
பா.ஜ.க. அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க மறுப்பு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் மறுப்பு, 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்ட நிதி குறைப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவராமன், நாகராஜன், அம்பிகாபதி, பிரகாஷ், வீரமணி, கார்க்கி உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதேபோல் திருவெண்ணெய்நல்லூர், பாக்கம் கூட்டுசாலை, திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, செஞ்சி, வளத்தி கூட்டுசாலை, திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.