மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது

கரூர்- குளித்தலையில் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 209 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 18:31 GMT

சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை, ரூ.7.50 லட்சம் கோடி மெகா ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அந்தவகையில் கரூர் மனோகரா கார்னர் அருகே மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

100 பேர் கைது

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், கந்தசாமி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 26 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

குளித்தலை

குளித்தலையில் உள்ள காந்தி சிலையில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் வரை வந்தனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர், முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்பட 109 பேரை குளித்தலை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மறியல் ஈடுபட்டதாக 109 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்