ஆக்கிரமிப்புகளால் அழிவை நோக்கி செல்லும் மருதையாறு

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மருதையாறு ஆக்கிரமிப்புகளால் அழிவை நோக்கி செல்கிறது. ஆற்றை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-08 18:45 GMT

மருதையாறு

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது மருதையாறு. கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கங்களுள் ஒன்றான பச்சமலைத் தொடரில் இருந்து உற்பத்தியாகும் மருதையாறு பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளி, கொளக்காநத்தம், மூங்கில்பாடி, சிறுகன்பூர் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களோடு எண்ணற்ற சிறு, சிறு வாய்க்கால்களையும் இணைத்துக்கொண்டு சுமார் 35 கிலோ மீட்டருக்கும் மேல் பெரம்பலூர் மாவட்டத்தில் பாய்ந்து பின்னர், அரியலூர் மாவட்டத்தில் நுழைந்து இறுதியாக கொள்ளிடத்தில் கலக்கிறது. பல ஊர்களின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் மருதையாறு மற்றும் இதனுடைய கிளை வாய்க்கால்களையே நம்பி உள்ளது.

வாடிக்கையான ஒன்று

இத்தகைய சிறப்பு வாய்ந்த நீர்நிலையானது, முறையாக சீரமைக்கப்படாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள், செடி-கொடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு காரணங்களினால் வாய்க்கால்கள் போல காணப்படுவதை அனைவரும் அறிவர். மழைக்காலங்களில் வெள்ளநீர் செல்ல வழியில்லாத காரணத்தினால் தெற்கு மாதவி, சாத்தனூர், நத்தக்காடு, அயினாபுரம், பனங்கூர் உள்ளிட்ட ஊர்களில் வயல்களுக்குள் தொடர்ந்து நீர் புகுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் சிறுகன்பூர், கொளக்காநத்தம் ஆகிய வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளில் ஆங்காங்கே சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.149 கோடி செலவில்...

ஆனால் மருதையாற்றின் பல பகுதிகள் முறையான சீரமைப்பின்றி இவை ஆறுதானா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் பனங்கூர் கிராமத்தில், ஆறு முறையாக சீரமைக்கப்படாத காரணத்தினால் வயல்களில் வெள்ளநீர் புகுந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்றின் தலைப்பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் கொட்டரை-ஆதனூர்- குரும்பாபாளையம் பகுதியில், மருதையாற்றின் குறுக்கே சுமார் ரூ.149 கோடி செலவில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற வண்ணம் உள்ளது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் வாயிலாக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டில் 7 மாதங்கள் நீர் ஓடிய மருதையாற்றின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. மருதையாறு மற்றும் கிளை வாய்க்கால்களை முறையாக அளந்து, சீமைக்கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவைகளை அகற்றி, இருபுறமும் கரைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

இந்த கோரிக்கை வைக்கும்போதெல்லாம் போதிய நிதிவரப்பெற்றவுடன் சீரமைக்கப்படும் என்ற பதிலே அரசிடம் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்றினைந்து உரிய நிதியை ஒதுக்கி மருதையாறு மற்றும் கிளை வாய்க்கால்களை மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஆற்றைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் எனவும் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்