ஆத்தூர் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம்? அதிகாரிகள்-போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததா? என்பது குறித்து அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-01 21:44 GMT

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும், ராம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவருக்கும் செல்லியம்பாளையத்தில் ஒரு கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமண வரவேற்பு விழா செல்லியம்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்து கொண்டிருப்பதாக ஆத்தூர் தாசில்தார் மாணிக்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக வருவாய் ஆய்வாளர் சரளா, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் ஆகியோர் சமுதாய கூடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது திருமண கோஷ்டியினர் சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும் உணவு அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ராம நாயக்கன் பாளையத்தில் மணமகள் வீடு இருப்பதாக தெரிவித்தனர். அங்கு சென்று மணமகள் வீட்டில், மணமகளுக்கு ஆதார் கார்டு, பிறந்த சான்றிதழ் போன்ற ஆவணங்களை காண்பிக்குமாறு வருவாய்த்துறையினர் கேட்டனர். அதற்கு ஆவணங்களை தர அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சூர்யா ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்