2-வது திருமணம் செய்தபஸ் உரிமையாளர் கைது

திருத்துறைப்பூண்டியில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-26 18:45 GMT

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டியில் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி தேவி (வயது31). இவர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனக்கும் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலை காலனியில் வசிக்கும் பஸ் உரிமையாளராக ஹரிகிருஷ்ணன் (43) என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 35 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்தனர்.

அடித்து துன்புறுத்தினார்

எனது கணவர் ஹரிகிருஷ்ணன் கடந்த 1 ஆண்டாக குடும்பத்தை கவனிக்காமல் தினமும் மது அருந்திவிட்டு வருகிறார். இதுகுறித்து கேட்டால் அடித்து துன்புறுத்தி வந்தார். எனதுபிரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகளை எடுத்துச் சென்று விட்டார். இதுகுறித்து கேட்ட போது என்னை தாக்கினார்.

புதிய பஸ் வாங்க வேண்டும் எனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ. 5 லட்சம் வாங்கி வர வேண்டும் என கூறி திட்டினார். இதனால் நான் கோபித்து கொண்டு எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

வேறு பெண்ணுடன் திருமணம்

எனது கணவர் ஹரிகிருஷ்ணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக தகவல் அறிந்தேன். இதை தொடர்ந்து நான் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் இருந்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அந்த பெண் தான் எனது மனைவி என்று கூறியும், நீ இங்கிருந்து செல்லாவிட்டால் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்தார் என தெரிவித்திருந்தார்.

கைது

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கா மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து ஹரி கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்