அவதிப்படும் பெற்றோர்கள்-ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்-காலத்தின் கட்டாயமா? கருத்து சொல்கிறார்கள்
மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளை புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.
மண்டபமே தீர்மானிக்கிறது
கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல.
திருமணங்களை மண்டபங்களில் நடத்த வேண்டிய சூழல்தான் இருக்கிறது. முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு. முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.
திருமண 'பேக்கேஜ்'
முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம். அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன. 'கையில காசு... வாயில தோசை..' கதைதான்.
ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்க தொடங்கிவிட்டோம்.
விழி பிதுங்கும் பெற்றோர்
திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர்.
திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.
ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள்.
அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
கணிசமாக குறைந்து விட்டது
தர்மபுரியை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் மோகன்:-
கொரோனா காலத்திற்கு பிறகு மண்டபங்களில் ஆடம்பரமாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்தநிலையில் மண்டபங்களுக்கு கூடுதல் வரி, கூடுதல் பராமரிப்பு செலவு, மின் கட்டண உயர்வு ஆகியவை காரணமாக மண்டபங்களின் வாடகையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்போது மண்டபங்களில் திருமணங்கள் நடத்துபவர்கள் திருமணத்திற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் தங்குவதற்கு கூடுதல் அறைகள் கேட்கிறார்கள். ஏ.சி. வசதியுடன் அறைகளை அமைக்க கூடுதலாக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பெரும்பாலானவர்கள் கோவில்களில் திருமணத்தை நடத்திவிட்டு திருமண வரவேற்பு மட்டும் மண்டபங்களில் நடத்துகிறார்கள். இதனால் கட்டணம் பாதியாக குறைகிறது. ஒரு ஆண்டில் அதிகபட்சம் 65 நாட்கள் மட்டுமே மண்டபங்களில் திருமணங்கள், நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒரு ஆண்டில் 250 நாட்களுக்கு மேல் காலியாக உள்ள திருமண மண்டபங்களை பராமரிக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே அரசு எங்களுக்கு உதவ உயர்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் மின் கட்டணத்தை குறைத்தால் மிக நன்றாக இருக்கும்.
வாழ்வாதாரம் பாதிப்பு
டெண்ட் டெக்கரேட்டர்ஸ் சங்கங்களின் மாவட்ட துணை செயலாளர் முருகன்:-
எங்களுடைய சங்கத்தில் பந்தல் தொழிலாளர்கள், வாடகை பாத்திரம், ஒலி-ஒளி அமைப்பாளர்கள், மணப்பந்தல் அலங்காரம் செய்பவர்கள் உள்பட பல்வேறு தொழிலாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். கொரோனா காலத்திற்கு முன்பு திருமணங்கள், திருவிழாக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதால் எங்கள் தொழில் நன்றாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் திருமணங்கள், திருவிழாக்கள் விமரிசையாக நடப்பது கணிசமாக குறைந்து விட்டது.
திருமண மண்டபங்களில் முன்பு 2 நாட்கள் நடக்கும் விழா இப்போது ஒரே நாளாக குறைந்துவிட்டது. அதற்கு ஏற்ப டெக்கரேஷன் பணிகளும் சுருங்கி விட்டன. இதேபோல் நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர்கள் குறைந்துவிட்டன. நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாதம்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். இந்த தொழில் இப்போது பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொழிலை நம்பி முதலீடு செய்துள்ள 200 உரிமையாளர்கள் 1,500 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கப்பட்ட அலங்கார பொருட்கள் அதிக அளவில் நிகழ்ச்சி நடக்காததால் பயன்பாடு இன்றி வைக்கப்பட்டுள்ளன. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவ வேண்டும்.
வேலை வாய்ப்பு குறைந்து விட்டது
தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் வேல்முருகன்:-
கொரோனா பாதிப்பு காலத்திற்கு முன்பு அதிக சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் எங்களை போன்ற சமையல் கலைஞர்களுக்கு ஆர்டர்கள் மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. 3 வேளை உணவுடன் நடந்த திருமணங்கள் இப்போது ஒருவேளை வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிந்து விடுகின்றன. இதனால் இந்த தொழில் மூலம் சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறும் ஊழியர்கள், இலை எடுக்கும் தூய்மை பணியாளர்கள் என ஒரு நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு இப்போது கிடைப்பதில்லை.
குறிப்பாக தனியார் கேட்டரிங் நிறுவனங்கள் மூலம் உணவை நேரடியாக டெலிவரி செய்வதால் சமையல் தொழிலை நம்பி இருந்தவர்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் அரசு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், பண்டிகைகளில் உணவு சமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்று சமையல் தொழிலாளர்கள் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடம்பரம் தேவையில்லை
பாலக்கோட்டை சேர்ந்த குடும்ப தலைவி வசந்தா:-
இப்போது பலர் ஆடம்பரத்துக்காக திருமணம் நடத்துகிறார்கள். இது வசதி படைத்தோருக்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால் ஏழை-எளிய மக்களால் அப்படி நடத்த முடியாது. திருமணம் என்பது தேவையற்ற செலவு என்று சொல்லமாட்டோம். ஆனால் ஆடம்பரம் தேவையில்லை. கிராமப்புறங்களில் திருமணம் என்பது ஒரு சமூக அந்தஸ்தை நிலை நாட்டுவதாக உள்ளது. திருமணத்தை மிக எளிமையாக நடத்தினால் வசதி, வாய்ப்பு இல்லாதவர்கள் என்று கூறி விடுவார்கள். ஆனால் பெண்களின் திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், அவர்களுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை, குடும்பங்களின் சக்திக்கு ஏற்ப போடப்படும் நகை ஆகியவற்றில் எந்த குறையும் வைக்க கூடாது என்ற வழக்கம் உள்ளது. இதை கணிசமான குடும்பங்கள் பின்பற்றுகிறார்கள்.
முதலீடுகளாக வழங்கலாம்
கம்மாளபட்டியை சேர்ந்த நடராஜன்:-
முன்பு திருமண மண்டபங்களில் வாசலில் வந்து உறவினர்களை வரவேற்ற காலம் போய், வாடகைக்கு இளம்பெண்களை நிறுத்தி சிரித்து வரவேற்க சொல்லும் நிலை இப்போது இருக்கிறது. இதனால் வெறும் சம்பிரதாயமாக மட்டுமே பல திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குறிப்பாக உணவுகள் அதிகமாக வீணாகிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் விழிப்படைய வேண்டும். திருமணங்களில் உணவுகளை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து அந்த தொகையை மணமக்களுக்கு எதிர்காலத்தில் உதவும் வகையில் நிலம், வீடு போன்ற முதலீடுகளாக வழங்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் கருத்து
மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.