திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டிற்கு நேற்று பீர்க்கங்காய் வரத்து அதிகமாக இருந்தது. 15 கிலோ எடை கொண்ட பீர்க்கங்காய் கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குவிந்த பீர்க்கங்காய்
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மார்க்கெட்டிற்கு அவினாசி, பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பீர்க்கங்காய் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. சுமார் 7 டன் அளவில் பீர்க்கங்காய் வரத்து இருந்தது. இவை சுமார் 15 கிலோ எடை கொண்ட கட்டுகளாக விற்பனை செய்யப்பட்டது. காய்களின் தரத்திற்கு தகுந்தவாறு ஒரு கட்டு பீர்க்கங்காய் மொத்த விற்பனை விலையாக ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. காய் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதிக அளவில் பீர்க்கங்காய் வாங்கி சென்றனர். இதேபோல், புடலங்காய், பாகற்காய் வரத்தும் அதிகமாக இருந்தது. இவை பல்லடம், சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் கொண்டு வரப்பட்டிருந்தன.
புடலங்காய்
குறிப்பாக புடலங்காய் வரத்து சற்று அதிகமாக இருந்தது. சுமார் 15 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு புடலங்காய் தரத்திற்கேற்றவாறு மொத்த விற்பனை விலையாக ரூ.300 முதல் ரூ.350 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், பாகற்காய் ரூ.350 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்த விலையை விட நேற்று புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய்களுக்கு விலை சற்று அதிகம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் சில தினங்களுக்கு காய்கறிகள் அதிக அளவில் வரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.