மாடுகள் வரத்து அதிகரித்து இருந்ததால் விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்ததால் விலை வீழ்ச்சியடைந்தது.

Update: 2022-12-03 17:05 GMT

குண்டடம் வாரச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்ததால் விலை வீழ்ச்சியடைந்தது.

மாட்டுச்சந்தை

குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலை 2 மணிமுதல் காலை 7 மணிவரை கோழிகள் மற்றும் ஆடுகள் விற்பனை நடைபெறும். பின்னர் மதியம் 1 மணிமுதல் மலை 6 மணிவரை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். அதன்படி சிந்து இன மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், கிடாரிகள், காளைகன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவைகளை வாங்க வியாபாரிகள் ஊட்டி, ஈரோடு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், கேரளா, ஆந்திர,கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தைக்கு வாரம்தோறும் 2 ஆயிரம் மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

குண்டடம் வாரச்சந்தைக்கு கடந்த வாரத்தை விட நேற்று மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டதாலும்,சபரிமலை சீசன் மற்றும் கார்த்திகை தீபதிருநாள் நெருங்கி வருவதால் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. வரத்து அதிகமானதால் மாடுகளின் விலை கடும் வீழ்ச்சியடைத்தது. இதனால் கடந்தவாரங்களில் ரூ.40ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது. ரூ.20ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடாரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விலை போனது.

விற்பனை

இறைச்சிக்கு ரூ. 25 ஆயிரம் வரை விலை போன மாடுகள் ரூ.20ஆயிரம் வரை விற்பனையானது.இந்த விலை வீழ்ச்சியால் மாடுகளை விற்க கொண்டுவந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த விலை வீழ்ச்சி கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் வரை இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்