திருப்பூர் பெருமாள் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட் புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது.
பூ மார்க்கெட்
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் கடைகள் இடித்து அகற்றப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டது. இதற்காக தற்காலிக பூ மார்க்கெட் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகராட்சியின் புதிய பூ மார்க்கெட் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து பூ மாா்க்கெட் பொலிவூட்டப்பட்டு திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. பூ மார்க்கெட்டை முன்னாள் பூ மார்க்கெட் சங்க செயலாளர் ரத்தினசாமி மற்றும் பிரபல வாஸ்து நிபுணர் பகவான் சந்திரசேகரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
85 கடைகள்
அதைத்தொடர்ந்து குத்தகைதாரர்கள் சரண்யா சண்முகம் மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். இந்த விழாவில் பெப்சி பாலு, நல்லூர் கனகராஜ், கணேசன், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட பூ மார்க்கெட்டில் 85 கடைகள் அமைந்துள்ளன. அதுபோல் இடவசதி, வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. நேற்று முதல் பூ மார்க்கெட் கடைகள் செயல்பட தொடங்கின.