தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணி; 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-09-03 12:54 GMT

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆய்வு பணிகள்

தொல்லியல் துறை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு கடல்சார் முன்கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு உள்ளது. இந்த பணிக்கு சாகர் தாரா ஆய்வு கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வு பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வ.உ.சி. துறைமுக தலைவர் டி.கே.ராமசந்திரன், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 அமைச்சர்கள்

தொழில்துறை, தமிழ் அலுவல் மொழி, தமிழ் கலாசாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் தொல்லியல் துறை தூத்துக்குடி மாவட்டத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கொற்கையில் சங்க காலத்தில் இருந்த துறைமுகப்பட்டினத்தில் முன்கள ஆய்வுகளை செய்வதற்கு இப்போது தேசிய கடலியல் நிறுவனம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு தமிழக தொல்லியல் துறையும் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. இந்த பணிக்காக கப்பலும் இங்கு வந்து உள்ளது.

கொற்கையில் ஆய்வு

1968-ல் இருந்து கொற்கையில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் ஆய்வில் பழைய கொற்கை துறைமுகம் எங்கே இருக்கிறது என்பதையும் கண்டறியும் வகையில் இருக்கும்.

தற்போது கொற்கை, கடலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாமிரபரணியில் இருந்து வடக்கு 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆனால் பண்டைய நிலவியல் அமைப்புபடி கொற்கை எந்த இடத்தில் அமைந்திருக்க வேண்டும். கடலின் பகுதி எங்கே இருக்க வேண்டும். அதன் கட்டமைப்புகள் ஏதேனும் இருக்கிறதா?, அந்த காலத்தில் துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் இருந்து சிதைந்த மரக்கலன்கள் கிடக்கிறதா? என்பதை ஆய்வுகள் படி கண்டெடுப்பதன் மூலமாக இங்கே உள்ள பழைய துறைமுகங்கள், பண்பாட்டு நாகரிக சின்னங்களாக அமைக்க முடியும். இந்த பணியானது முதல் ஒரு வாரம் தூத்துக்குடிக்கும், திருச்செந்தூருக்கும் இடையேயான கடல் பகுதியில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதில் கிடைக்கக்கூடிய தகவல்களை கொண்டு அடுத்ததாக விரிவாக ஆய்வுகள் செய்யப்படும். ஆய்வில் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் இடத்தில் கூடுதலாக கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தன், தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் ராஜன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக பேராசிரியர் சிவகொழுந்து, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்