சாமந்தி பூக்கள் விலை சரிவு
பொம்மிடி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் சாமந்தி பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் சாமந்தி பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சாமந்தி பூக்கள் சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் மல்லிகை, செண்டுமல்லி கோழிக்கொண்டை, சாமந்தி, உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பொம்மிடி அருகே முத்தம்பட்டி, பத்திரெட்டிஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி, மோட்டாங்குறிச்சி, ரேகடஅள்ளி, பையர்நத்தம், விழுதுபட்டி, வாசிக்கவுண்டனூர், பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பொம்மிடி பகுதியில் இந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து உள்ளனர். இவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொம்மிடி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொம்மிடி பகுதியை பொறுத்தவரை முத்தம்பட்டி, மணிபுரம், மணலூர், சிக்கம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி ஆகிய பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சில இடங்களில் பூக்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மார்க்கெட்டுகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் ஆயுத பூஜைக்கு ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.200-க்கு மேல் விற்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினர்.