மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சங்கராபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். தீபாராதனை காண்பித்ததும், அங்கிருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் காலனி மக்கள் செய்திருந்தனர்.