மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் திருவிழா
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தை அடுத்த நடுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கடந்த 16-ந் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 17-ந் தேதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச்சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக்குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அபிஷேகம்
கடந்த 18-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாவிளக்கு பூஜை
மாலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனர். பின்னர் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன்வைத்து மாவிளக்கு பூஜை செய்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை கம்பம் பிடுங்கி கிணற்றில் விடும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்து. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.