மாரியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி அம்மன் அழைப்பு நடைபெற்றது.

Update: 2023-04-16 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி அம்மன் அழைப்பு நடைபெற்றது.

கோவில் திருவிழா

கோத்தகிரி கடைவீதி பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வந்தது. 5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, மலர் அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு கோத்தகிரி மாரியம்மன் துணை கோவிலாக குன்னூர் ரோட்டில் உள்ள கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது. இதில் பக்தர்கள் அம்மன் அழைப்பு பாடல்களை பாடியவாறு அம்மனை கடைவீதி மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கல்யாணம்

பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோத்தகிரி வட்டார மகளிர் மன்றம் சார்பில், பெரியநாயக்கன்பாளையம் தவத்திரு சாக்த வராஹி மணிகண்ட சுவாமிகள், மூலதுறை சிவத்திரு குழந்தைவேல், சிவத்திரு சக்திவேல் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, மலர் அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கடைவீதி, காம்பாய்கடை, பஸ்நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம் வழியாக டானிங்டன் வரை திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்