அரியலூரில் 8-ந் தேதி மாரத்தான் போட்டி
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூரில் 8-ந் தேதி மாரத்தான் போட்டி நடக்கிறது.
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்தவும் மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த பிரசாரம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாரத்தான் போட்டி
இந்தநிலையில் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரியலூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து "ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கு எதிரான மக்கள் பிரசாரம்" மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் 7-ந் தேதி மாலை 6 மணி வரை 9944337061 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். 8-ந் தேதி காலை 6 மணி முதல் காலை 6.30 மணி வரை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நேரில் பதிவு செய்யலாம்.
பரிசு
மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்படும். அடுத்த 7 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள பரிசுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வழங்கப்படும். நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.