வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பு சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்படும்
வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பு சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்க்கப்படும்
திருப்பூர்
வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பை சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் சேர்த்து முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று திருப்பூரில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தொழில் முனைவோர் மாநாடு
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தலைப்பில் தொழில் முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு நேற்று காலை திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்றார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார்.
இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167 கோடியே 58 லட்சத்தில் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதன்படி, தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற முழக்கத்தோடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவி செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என நினைக்கும் தமிழ்நாடு அரசானது தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இதுபோன்ற முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறோம்.
கடன் உத்தரவாத திட்டம்
இன்று புதிதாக தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாக பெறலாம். இணையதளம் மூலம் இந்த திட்டம் இயங்கும். முதல்கட்டமாக 6 வங்கிகளை இணைப்போம். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடிக்கான தளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உங்களது தயாரிப்புகளை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்கள், காலதாமதங்கள் ஆகியவற்றை குறைப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிக்கடனுக்கான சொத்து பிணையம் பத்திர பதிவு செய்ய ஆன்லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வழிகாட்டி மையம்
பட்டியலின பழங்குடியின மக்களுக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தொழில்துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் பணியாக இதை நாங்கள் நினைக்கிறோம்.
தற்போதைய நான்காம் தொழில் புரட்சி காலத்தில் புதிய தொழில் நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். அதற்கு வழிகாட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு கைகோர்த்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்.
வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பு
தமிழகம் முழுவதும் கயிறு குழுமங்கள் உருவாக்கி கயிறு தொழிலை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோர்கள் மட்டுமில்லாமல் தென்னை விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது.
மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை இங்கு வெளியிடுகிறேன். ஹோம் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஆண்டொன்றுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகைப்பொருட்கள் தயாரிப்பை சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் சேர்த்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. சிறப்பு வகை தொழில்கள் பிரிவில் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பு சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும்.
தேவையான வசதிகள்
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு செவிமடுக்க இந்த அரசு எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறது. புதிய தொழில்களை அறிமுகம் செய்யுங்கள். இருக்கும் தொழில்களை வளப்படுத்திக்கொள்ளுங்கள். ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்க்கை கொடுங்கள். அதன் மூலமாக உங்கள் வட்டாரத்தின் சமூக பொருளாதார சூழலை வளர்த்தெடுங்கள். இவை அனைத்தும் சேர்ந்து மாநிலத்தையும், ஒட்டுமொத்தமாக இந்திய நாட்டையும், அது நிச்சயமாக வளர்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர். ஈஸ்வரன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், பியோ தலைவர் சக்திவேல், சிட்கோ மேலாண்மை இயக்குனர் மதுமதி, கலெக்டர் வினீத், மற்றும் தொழில்முனைவோர், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். கோவையில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பங்கேற்றனர்.