பாதை ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு

Update: 2022-12-01 14:28 GMT


தாராபுரம் சின்னக்காம்பாளையம் அருகே பாதை ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுகக்கோரி ஆர்.டி.ஓ.விடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

பாதை ஆக்கிரமிப்பு

தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் பேரூராட்சி பகுதியில் நீர்நிலை வழிப்பாதையை தடுத்து தனிநபர் ரியல் எஸ்டேட்டாக மாற்றி வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நபர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தெய்வசிகாமணி மற்றும் விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,:-

சின்னக்காம்பாளையம் கிராமத்தில் சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் உள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் நேராக வடக்கே சின்னக்காம்பாளையம் கிராமம் சர்வே எண் 171 மற்றும் 182 நீர்வழி பாதை வழியாக சின்னபுத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சப்பட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலந்து வருகிறது

தற்போது அந்த வழியாக செல்லும் ஓடையில் நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து திருப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் அப்பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை சமன் செய்து ஏராளமான லாரிகளில் கிராவல் மண் கொண்டு வந்து கொட்டி நீர்வழிப் பாதையை அடைத்துள்ளார். அத்துடன் நிலத்தை உயர்த்தியதால் நீர்வழிப் பாதையில் செல்லும் தண்ணீர் தடைபட்டு தற்போது விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அதிலும் வயல் வெளிகளில் தேங்கியுள்ள தண்ணீரால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே நீர்வழிப்பாதையை தடுத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்