கடும் பனிப்பொழிவால் கருகும் மேரக்காய் கொடிகள்

ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் கடும் பனிப்பொழிவால் மேரக்காய் கொடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-01-26 18:45 GMT

கூடலூர்

ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் கடும் பனிப்பொழிவால் மேரக்காய் கொடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேரக்காய் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும். அதன்படி கடந்த சில நாட்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதேபோன்று கூடலூர் பகுதியிலும் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவு

இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் பயிரிட்டுள்ள மேரக்காய் கொடிகளின் இலைகள் கருகி வருகிறது. மேலும் கொடிகளில் முளைக்கும் அரும்புகளும் கருகுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

நஷ்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் கோடை கால பயிர்களான மேரக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது.

இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக மேரக்காய் கொடிகளின் இலைகள் கருக தொடங்கிவிட்டது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும். ஏற்கனவே கொள்முதல் விலை மிக குறைவாக உள்ளது. தற்போது விளைச்சலும் பாதிக்கப்பட்டால், நஷ்டம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்