மாங்கனி கண்காட்சி நாளை தொடங்குகிறது

Update: 2023-07-03 19:30 GMT

கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.

மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை (புதன்கிழமை) 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ெதாடங்குகிறது.

இதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், அரங்கிற்கு உள்ளே செல்லும் நுழைவுவாயில், வெளியே செல்லும் பாதைகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள்

29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரசு துறை சார்பாக அரங்குகளும், தனியார் அங்காடிகள் மற்றும் கலையரங்கம், மா கண்காட்சி அரங்க, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட அங்காடிகள், செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடைய அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அசம்பாவிதம் செய்யும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டேவிட் டென்னிசன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்