மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம்
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஆராதனையும் நடைபெற்றது.
பின்னர் கடக லக்னத்தில் சந்திரசேகர சோமாஸ் கந்தர் சமேத விநாயகர், முருகன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களோடு பஞ்சமூர்த்தி தேரோட்டம் நடைபெற்றது. இதில் மாங்காடு, பூந்தமல்லி, குன்றத்தூர் மட்டுமின்றி சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது கோவிலின் முக்கிய நான்கு மாட வீதிகளின் வழியாக சென்றது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணல் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.