'மாண்டஸ்' புயல் எதிரொலி; வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

‘மாண்டஸ்’ புயல் எதிரொலியால் திருவள்ளூர், திருத்தணியில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Update: 2022-12-11 11:17 GMT

மாண்டஸ் புயல்

வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை முழுமையாக கடந்தது. இதனால் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் அதிவேகமாக காற்று மற்றும் தொடர்மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் வீசிய சூறைகாற்றால் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில், 5 மின்கம்பங்கள், அகூர், எரும்பி, சிங்கராஜபுரம் உள்பட பத்து கிராமங்களில், 15 மின்கம்பங்கள் உடைந்தன. மேலும் மின்வாரியம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை திருத்தணி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து உடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் செய்யப்பட்டன.

வீடுகள் இடிந்தன

புயல் காரணமாக இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் திருவலங்காடு ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சியில் உள்ள ரங்காபுரம் கிராமத்தில் 6 வீடுகள், காவேரிராஜபுரம் கிராமத்தில் 4 வீடுகள், திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் 4 வீடுகள் உள்பட திருத்தணி தாலுகாவில் மொத்தம் 40 வீடுகள் இடிந்து விழுந்தன.

வீடுகள் இழந்து பாதிக்கப்பட்டவர்களை திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ., ஹசரத்பேகம், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, துணை வட்டாட்சியர் சந்துரு, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் இடிந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இதேபோல் திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமத்தில் வசிக்கும் கோபி என்பவருக்கு சொந்தமான ஒரு பசு கன்று, திருத்தணி நகரம் கலைஞர் நகர் சாந்தி என்பவருக்கு சொந்தமான எருமை கன்று என 2 கன்றுகள் புயலால் இறந்தன.

மரங்கள் சாய்ந்தன

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம், பிஞ்சிவாக்கம் கண்டிகை, காலனி போன்ற பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. பிஞ்சிவாக்கம் மேல்நல்லாத்தூர் செல்லும் சாலை, பிஞ்சிவாக்கம் மப்பேடு செல்லும் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் வேரோடு சாய்ந்ததால் வீட்டின் முன் பக்கம் சேதம் அடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று வீடு மற்றும் சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார். அதேபோல கடம்பத்தூர், மேல்நல்லத்தூர், கீழ்நல்லாத்தூர், மணவாளநகர், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து வெட்டி சீரமைத்தனர்.

பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை பகுதியில் மாண்டஸ் புயல் காற்று காரணமாக அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு தாசில்தார் தமயந்தி மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்துடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ரோட்டில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்