அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர் கைது
நத்தம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 35). இவர் கடந்த 4-ந்தேதி இரவு நத்தத்தில் இருந்து எரக்காபட்டிக்கு செல்வதற்காக காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டரிடம் ஏரக்காபட்டிக்கு அவர் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் அந்த பஸ் ஏரக்காபட்டியில் நிற்காமல், பக்கத்து கிராமமான சமுத்திராபட்டியில் போய் நின்றது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாமுகமது பஸ்சை விட்டு இறங்கியதும், கீேழ கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது எறிந்தார். இதில், பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமுகமதுவை கைது செய்தனர்.