முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்தவர் 8 பவுன் நகையுடன் தலைமறைவு
முகநூல் மூலம் பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர் 8 பவுன் நகையை பறித்து சென்று விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
முகநூல் மூலம் பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர் 8 பவுன் நகையை பறித்து சென்று விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் புகார் அளித்தார்.
குறைதீர்வு முகாம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கவுதமன், கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமானவர்கள் புகார் மனு அளித்தனர்.
ரூ.1 லட்சம் அபேஸ்
ஊசூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். நான் கடந்த 3 மாதத்துக்கு முன்பு அரியூரில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மையத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அருகே நின்றிருந்த ஒருவரிடம் என்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்பதை சரிபார்க்குமாறு உதவி கேட்டேன். அவர் எனது ஏ.டி.எம். கார்டை வாங்கி சரிபார்ப்பது போன்று நடித்து என்னுடைய கார்டை வைத்துக் கொண்டு, அவர் வைத்திருந்த வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
இதையடுத்து எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் எடுக்கப்பட்டது எனக்கு தெரியவந்தது. உதவி செய்வது போன்று நடித்த நபர் தான், எனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை அபேஸ் செய்துள்ளார். இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மோசடி செய்தவரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முகநூல் பழக்கம்
வேலூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் முகநூல் மூலமாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். சிறிது நாள் பழக்கத்துக்கு பின்னர் அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் என் குழந்தைகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். சில ஆண்டுகள் கழித்து வீடு கட்ட இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறி என்னிடம் இருந்த 8 பவுன் நகையை வாங்கிச் சென்றார். அதன் பின்பு அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.