உடுமலை அருகே அமராவதி பகுதியில் இரவு,பகலாக கனிம வளங்கள் கொள்ளை நடைபெற்று வருகிறது.
கனிம வளங்கள் கொள்ளை
மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் அதிசயத்தக்க ஆற்றல்களையும் அற்புதங்களையும் கொண்டது இயற்கை.அதில் படைக்கப்பட்ட மண், மலை, மரம், செடி, கொடி என ஒவ்வொன்றும் தன்னலம் கருதாது சுற்றுச்சூழலை பேணிக்காத்து உயிரினங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தருகிறது. இதனால் தான் பூமியின் இயக்கம் இரவு பகலாக சீரான முறையில் இயங்கி வருகிறது. ஆனால் இயற்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் சுயநல நோக்கோடு செயல்படும் ஒரு சிலர் மரங்களை வெட்டுதல், மண்வளத்தை மாசுபடுத்துதல், சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவித்தல், மழை பொழிவுக்கும் நிலத்தடி நீர் இருப்புக்கும் ஆதாரமாக உள்ள கனிம வளங்களை கொள்ளை அடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இயற்கையின் தன்மை பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அதை உணர்த்தும் விதமாக உடுமலையை அடுத்த அமராவதி காவல் சரக பகுதியில் முறையான அனுமதியின்றி மலைகளை வெடிவைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
அழியும் உயிரினங்கள்
பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து சேதாரம்இல்லாமல் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும். இதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் களஆய்வு சென்று கனிமவளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.
ஆனால் உடுமலையை அடுத்த அமராவதி பகுதியில் நிலைமை தலை கீழாக உள்ளது. கடந்த சில நாட்களாக மலை அடிவாரப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கில் உள்ள மலைகளை வெடி வைத்து தகர்த்து சைஸ், சிறுகல் மற்றும் வேலி போடுவதற்கு பயன்படும் கம்பிகற்களை உற்பத்தி செய்தும் நிலத்தடி நீர் உயர்வுக்கு ஆதாரமாக உள்ள கிராவல் மண்ணை கடத்திச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இயற்கையால் படைக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாத அரிய வகை சிறு உயிரினங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும், அழிந்தும் வருகின்றன.
உடந்தையான அதிகாரிகள்
மேலும் கிராவல்மண் கடத்தல் வெளியில் தெரியாத வகையில் மண்ணை முழுவதுமாக தண்ணீரில் நனைத்து லாரியில் லோடு ஏற்றி செல்கின்றனர். இதனால் சாலை முழுவதும் ஈரப்பதம் அடைந்து சேதம் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை சேதம் அடைவது வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி கனிம வள கொள்ளையால் இயற்கை மாற்றம் அடைந்து வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுடன் உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில்அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் அமராவதி பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து கனிமவள கொள்ளையை தடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.