விவாகரத்து ஆனதால் வேதனை: தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை

தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்டார். விவாகரத்து ஆன வேதனையில் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.

Update: 2022-06-08 18:42 GMT

தஞ்சாவூர்:-

தஞ்சையில், ஓட்டல் மாடியில் இருந்து குதித்து லேப் டெக்னீசியன் தற்கொலை செய்து கொண்டார். விவாகரத்து ஆன வேதனையில் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.

லேப் டெக்னீசியன்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆனந்தராஜ்(வயது 31) என்பவர் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். தற்காலிக ஊழியரான ஆனந்தராஜின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தராஜூக்கு திருமணம் நடந்தது. குடிப்பழக்கம் காரணமாக ஆனந்தராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து

இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஆனந்தராஜின் மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஆனந்தராஜ் மட்டும் தஞ்சையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே விவாகரத்து கேட்டு ஆனந்தராஜ் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அதில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தனக்கு விவாகரத்து கிடைத்ததால் ஆனந்தராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான ஆனந்தராஜ் நேற்று முன்தினம் தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

திடீரென இரவில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்