குழவிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொன்ற வாலிபர்
தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் தலையில் குழவிக்கல்லை போட்டு மகன் கொன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் தலையில் குழவிக்கல்லை போட்டு மகன் கொன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடிபோதையில் தகராறு
தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகன் சின்னத்துரை(24). இவர், கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சின்னதம்பி கூலிவேலை செய்து கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்காததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடும் வாக்குவாதம்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூரில் இருந்து ஊருக்கு சின்னத்துரை வந்தார். அப்போதும் சின்னதம்பி தன் மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதை சின்னத்துரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டில் சின்னதம்பி தகராறு செய்தார். இது சின்னத்துரைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தந்தையை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தந்தை, மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை
தந்தை இப்படி தொடர்ந்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தாயிடம் தகராறு செய்வதால் ஆத்திரம் அடைந்த சின்னதுரை நேற்று அதிகாலையில் வீட்டின் முன் பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்த தனது தந்தை சின்னதம்பி மீது அம்மி குழவிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சின்னதம்பி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சின்னதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.