போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி மூலம்பண மோசடி செய்தவருக்கு 22 ஆண்டுகள் ஜெயில்

போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி மூலம் பணமோசடி செய்த முதியவருக்கு 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-08-25 19:00 GMT

போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி மூலம் பணமோசடி செய்த முதியவருக்கு 22 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பண மோசடி

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 64). இவரது நண்பர் வாலாஜாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கலைவாணன் ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார் என்றும், அதில் சீட் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு கலைவாணனும் உடந்தையாக இருந்துள்ளார்.

அவர்கள் இருவரும் வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2007-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதால் இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இதுதொடர்பாக மேல்விசாரணை நடத்தினர்.

22 ஆண்டுகள் ஜெயில்

மேலும் இதுதொடர்பான வழக்கு வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் வழக்கு நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் இறந்து விட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு திருமால் தீர்ப்பு கூறினார். அதில் பணமோசடியில் ஈடுபட்ட கலைவாணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் இந்திராமுஷா ஆஜராகினார். அவரையும், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா, தலைமைக்காவலர் சுரேஷ் ஆகியோரை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்