தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

திருச்சிற்றம்பலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-01 19:59 GMT

திருச்சிற்றம்பலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

அண்ணன்- தம்பி

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி பெரியநாயகி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பும், செல்வம் கடந்த ஆண்டும் இறந்துவிட்டனர். இவர்களுடைய மகன்கள் பிரசாந்த் (வயது30), பிரகதீஷ் (24). இதில் பிரகதீஷ் கை, கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவருடைய அண்ணன் பிரசாந்த், அண்மையில் ஊருக்கு வந்து, திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் வசிக்கும் காவல்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைகாட்டியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். அந்த மோட்டார் சைக்கிளை பிரசாந்த் ஓட்ட, காவல்துறையை சேர்ந்த அவரது நண்பர், பின்பக்கம் அமர்ந்து, இருவரும் திருச்சிற்றம்பலம் நோக்கி நள்ளிரவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தடுப்புச் சுவரில் மோதியது

அப்போது ஆவணம் குளத்துக்கரை வளைவு சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் பிரசாந்த் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து பிரசாந்தின் உறவினர் அன்பழகன் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதரவற்ற நிலையில் மாற்றுத்திறனாளி

ஏற்கனவே தாய், தந்தையை இழந்த நிலையில் தற்போது தனது அண்ணனையும் மாற்றுத்திறனாளி பிரகதீஷ் இழந்து, ஆதரவற்ற நிலையில் உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்